கர்ணன் தனக்கு தேரோட்டியாக சல்லியன் இருந்தால் வெற்றி வாய்ப்பு அதிகம் என சொல்ல, துரியோதனன் அவரை கர்ணனின் தேரோட்டியாக இருக்குமாறு கேட்க அவரது இருப்பிடம் செல்கிறான். சல்லியனை சந்தித்து அர்ஜுனனை வெல்ல நீங்கள் கர்ணனுக்கு தேரோட்டியாக இருக்க வேண்டும் என்று வேண்டினான். கடும் கோபம் கொண்ட சல்லியன் “ துரியோதனா, நான் ஒரு அரசன். ஆனால், கர்ணன் ஒரு தேரோட்டியின் மகன். என் நிலை இறங்கி நான் அவனுக்கு தேர் ஒட்டுவதா?? “ என்று கடிந்தார். துரியோதனனோ “ நீங்கள் கர்ணனை விட மேலானவர்தான். நான் தங்களை அவமதிக்க முயலவில்லை சல்லியரே. என் மனதில் சில காரணங்கள் உண்டு. கர்ணன் அஸ்திரங்கள் உபயோகத்தில் அர்ஜுனனை விட மேலானவன். தாங்கள் ரதம் செலுத்துவதிலும், குதிரைகளை கட்டுக்குள் வைப்பதிலும் பகவான் கிருஷ்ணருக்கு நிகரானவர். கிருஷ்ணன் அனைவருக்கும் முதலானவன். அவனை யுத்தத்தில் வெல்ல யாராலும் இயலாது என்பதை நாம் அனைவரும் அறிவோம். ஆனாலும் அவன் பார்த்தனுக்கு சாரதியாய் இருக்கிறான். நீங்கள் கண்ணனைப் போல சமமான திறமை வாய்ந்தவர். தாங்கள் கர்ணனுக்கு ரதம் ஓட்டினால் உங்களுக்கு அது அவமானம் தராது. மாறாக பேரையும், புகழையும் தான் தரும். “ என்று நயவஞ்சக வலை விரித்தான்.
சல்லியன் தன்னை கண்ணனுடன் ஒப்பிட்டு பேசியதால் மனம் மகிழ்ந்தார். ஒரு நிபந்தனையோடு அதற்க்கு ஒப்புக்கொண்டார். “நான் என்ன சொன்னாலும் கர்ணன் அதைப் பொறுத்துக் கொள்ள வேண்டும். என்னை அவமதிப்பது போலே அவன் நடந்தால் நான் அவனுக்கு சாரதியாய் இருக்க மாட்டேன். இதற்கு சம்மதம் எனில், கர்ணனுக்கு தேர் ஓட்ட நான் சம்மதிக்கிறேன். “ என்றார். துரியோதனனும் கர்ணனும் அவரின் நிபந்தனைக்கு ஒப்புகொண்டடால் சல்லியன் கௌரவ போர் தளபதியான கர்ணனுக்கு தேரோட்டி ஆனார்.
பாண்டவ படைக்கு ஆதரவாக போரில் கலந்து கொள்ள வந்த சல்லியன், விருந்து உபசரிப்பால் ஏமாற்றப்பட்டு, கொடுத்த வாக்கினால் கௌரவர்களுக்கு போரிட சென்றவன். இதை அவன் தருமரிடம் கூறிய போது தருமர் அவனின் நிலை அறிந்து சல்லியனை கௌரவர்களுக்காக போர் செய்ய அனுமதித்தார். அப்போது அவர் ஒரு உதவியை சல்லியனிடம் கேட்டார். “அதாவது, கர்ணன், அர்ஜுனனுடன் போர் புரிய நேர்ந்தால், அர்ஜுனனை பாராட்டியே பேச வேண்டும். இது கர்ணனின் ஆவலைக் குன்றச் செய்யும் ” என்பதே அந்த உதவி. நிச்சயம் செய்வதாக வாக்களித்தார் சல்லியன்.
துரியோதனனின் பக்கத்தில், கிருபரும், கிருத்வர்மன் வலது புறம் இருக்க, அவர்களைத் தாண்டி, சகுனியும், உலுகனும் இருக்க, சுசர்மன் இடது புறம் காக்க, துரியோதனன் அவர்களுக்கு நடுவே இருந்தான். அவனுக்கு பின்னே, ஆயிரம் வீரர்களுடன் யானை மீது துச்சாதனன் இருந்தான்.. அனைவருக்கும் பின்னே வியூகத்தைக் காக்க அஸ்வத்தாமா நின்றான். இவர்கள் அனைவருக்கும் முன்னிலையில் கர்ணன் நிற்கிறான். அவனுக்கு பின்னே அவனது வீர மக்கள், விருஷசேனா, பானசேனா மற்றும் சுசேனா ஆகியோர் நிற்கிறார்கள். இவர்கள் மூவருமே பாலகர்கள். ஆனாலும் வீரர்கள். போர்க்கலையில் விர்தகர்கள். போர் வெறியன் கர்ணன். அவன் மக்கள் இப்படி இல்லாமல் இருந்தால் தான் ஆச்சரியப் படவேண்டும்.
பாண்டவர்கள் பக்கத்தில்....
அர்ஜுனன், திஷ்டத்துய்யுமன், பீமன், சாத்யகி, சிகண்டி, நகுலன், சகதேவன், என அனைவரும் அணிவகுத்து நிற்க, அவர்களின் பின்னே, தருமர் ஒரு பாதுகாப்பான இடத்தில் இருந்தார். மாவீரர்கள் அனைவரும் அணிவகுத்து நிற்க, சங்கநாதங்களும், போர் முரசுகளும் இரு புறமும் முழங்க, வேங்கைகளும், சிறுத்தைகளும், சீறிப் புறப்பட ஆயத்தமாய் இருந்தன. ஆனால், முதல் நாள் போரை ஒப்பிடுகையில், போர் வீரர்களில் எண்ணிக்கை, மூன்றில் ஒரு பாகமாய் குறைந்திருந்தது. யுத்தம் ஆரம்பமானது. ரத, கஜ, துரக, பதாதிகள் அனைவரும், வெற்றி அல்லது வீர மரணம் எனும் எண்ணம் கொண்டு, தங்கள் லட்சியமாய் முடிந்த வரை பகைவர்கள் எண்ணிக்கையை குறைப்பது என்பதைக் கொண்டு ஒருமித்தக் கருத்துடன் நடந்த அன்றைய போர்....... யுத்த சரித்திரத்தில் நிச்சயம் ஒரு மறக்க முடியாத நாள்.
போர் ஆரம்பிக்கையிலேயே கர்ணனுக்கும், தேரோட்டியான சல்லியனுக்கும் முரண்பாடு ஏற்பட்டது. ' இன்று பாண்டவர்களை வெல்வது உறுதி ' என்றான் கர்ணன். உடன் சல்லியன் ' உன் தற்பெருமையை நிறுத்தி வீரத்தை போர்க்களத்தில் காட்டு 'என்றான் சல்லியன். ' தேவாதி தேவர்களையும், அசுரர்களையும் வென்ற எனக்கு அர்ச்சுனனை வெல்வது எளிது ' என்றான் கர்ணன். “ வீண் தற்பெருமை வேண்டாம். உன் வீரம் நான் அறிவேன். சிவனுடன் போர் புரிந்தவன் அர்ச்சுனன். சித்திரசேனன் என்னும் கந்தர்வனுடன் போரிட்டு துரியோதனனை மீட்டவன் அவன். அப்போது, கர்ணா நீ எங்கே போனாய்? விராட நகரில் ஆநிரைகளை மீட்ட போது அர்ச்சுனனுக்கு பயந்து ஓடியவன் நீ. உத்தரன் தேரோட்டிய போதே கங்கை மைந்தனையும், துரோணரையும் வென்றவன், கண்ணன் தேரோட்டும் போது சற்று எண்ணிப்பார். உன் ஆணவப் பேச்சை நிறுத்தி, ஆற்றலை செயலில் காட்டு “ என்றான் சல்லியன். கொடுத்த வாக்கை நிறைவேற்ற வேண்டாமா ? தன் வேலையை ஆரம்பித்தான் சல்லியன்.
கர்ணனின் ஆரம்பம் அசத்தலாகவும், பாண்டவர்களுக்கு அச்சுறுத்தலாகவும் இருந்தது. அவனது ரதத்தை இருபுறமும் இருந்து காத்தனர் அவனது இரு மக்கள். சத்தியசேனன் மற்றும் சுசேனன். விருசசேணன் கர்ணன் தேரின் பின்னால் இருந்து தன் தந்தையைக் காத்தான். போர்.. போர்... என திணவெடுத்த அவன் தோள்கள் பூரிப்பில் மேலும் விரிய, சாந்தம் தவழும் முகம் சந்திரன் எனில், வீரம் ததும்பும் முகம் சூரியனின், கொளுத்தும் வெய்யிலில், பூமியில் தோன்றிய சூரியனாய், சூரர்களை அழிக்க வந்த சொர்ண சொரூபமாய், தான் இருக்கும் இடத்தையே தன் வீரத்தால் பிரகாசிக்க வைத்தான் கர்ணன்.
அவன் சென்ற வழி எல்லாம், எதிரிக்கு அழிவு. பாண்டவ படையில் நிலை குலைவு. அவன் வீரத்தைக் காணக் காண, ஒவ்வொரு கௌரவர் தரப்பு வீரனுக்கும், உள்ளுக்குள் உற்சாகம் குமிழியிட்டுக் கிளம்பியது. தீரச் செருக்கு, திமிறி வெளிப்பட்டது அனைவருக்கும். வீறு கொண்டு அவர்கள் வேங்கைகளாய் வெறும் கையுடன், பாண்டவர் தரப்பு வீரர்களைப் பந்தாடினர். மின்னலும், இடியுமாய், விஜயத்தின் (கர்ணனின் வில்) வீச்சின் சத்தம் அந்த யுத்த களத்தில் எங்கு நோக்கினும் கேட்டது. சல்லியனின் திறமையில், கர்ணனின் ரதம், யுத்தகளம் எங்கும் சுற்றி, சுழன்று அடிக்கும் சூறாவளியாய், எட்டுத் திக்கும் விஜயம் செய்து, ஜெயம் தந்தது துரியோதனனுக்கு. ஆரம்பத்தில் கர்ணனின் ஊக்கத்தை கெடுத்த சல்லியனும், கர்ணனின் திறம் கண்டு “ உண்மையான வீரனை நான் இங்கே கண்டேன். அவன் மீது பெரும் மதிப்பு கொண்டேன் “ என உள்ளத்திலே கர்ணனை மெச்சி, உச்சி முகர்ந்தார். கர்ணனின் கண்ணசைவில் அவன் எண்ணம் புரிந்து, களத்தை அவனுக்கு சாதகமாக்கினார் சல்லியன். காணக் காணத் தெவிட்டவில்லை சல்லியனுக்கு கர்ணனின் வீரம். களைப்பு என்பதே அறியாதவனா இவன், என மலைப்பு வந்தது அவருக்கு...
பாண்டவர்களின் தரப்பில், சிறந்த வீரர்களாகக் கருதப்பட்ட, பானதேவன், சித்திரசேனன், சேனவிந்து, தபன் மற்றும் சூரசேனனை எளிதில் வீழ்த்தினான். கர்ணன், மாவீரர்கள் ஐவரைக் கொன்றதை கண்டவுடன், அவனுடன் போரிட, பாண்டவர் தரப்பில் இருந்து, திஷ்டத்துய்மன், சாத்யகி, பீமன் மற்றும் சிகண்டி என இத்துணை பேரும் சேர்ந்து ஒருவனான கர்ணனை எதிர்த்தனர். அனைவரையும் ஒரு புன்னகையுடனே எதிர்க்கொண்டான் கர்ணன். அவர்களில் முதலாய் கர்ணனை நோக்கி வந்த பீமனின் வில்லை கர்ணனின் மகன் சுசேனன் முறிக்க, விரைந்து வேறு வில்லை எடுத்த பீமன், பத்து அம்புகளால் சுசேனனின் கதையை முடித்தான். கர்ணன் மீதும் அம்பு மழை பொழிந்தான். கர்ணனின் இன்னொரு மகனான பானுசேனனையும், கூரிய கத்தி போன்ற அம்பினால் கொன்றான். தன் மக்கள் இருவரையும் தன் கண் முன்னே கொன்ற பீமனின் மீது கர்ணன் கடும் கோபம் கொண்டான். தொடர்ந்த பீமன், கர்ணனுக்கு துணையாய் வந்த சேனையை அழிக்கத் தொடங்கினான்.
பீமன் கடுமையாய் தாக்கப்பட்டான் கர்ணனால். இருவருக்கும் இடையே கடும் யுத்தம் நடந்தது. சிறிது நேரத்திற்கு பின் கர்ணன் பீமனால் தாக்குண்டு மயங்கி தேரில் விழுந்தான். அன்றைக்கு பீமன், போர்க்களத்தில் யமனைப் போலக் காட்சி தந்தான். சல்லியன், கர்ணனை போர்க்களத்தில் இருந்து வெளியேற்றிச் சென்றான். களம், பீமனின் கைக்குள் வந்தது. எங்கு நோக்கினும், ரத்த வெள்ளம். கர்ணன் களத்தில் இல்லாதது பாண்டவர்களுக்கு தகுந்த நேரமாய் மாறியது, பீமன் துச்சாதனனை தேடினான். துச்சாதனன் யானையின் மீது அமர்ந்து போரிட்டு கொண்டிருந்தான். அவனை நோக்கி விரைந்தான் பீமன். தன் கதாயுதம் கொண்டு யானையை வீழ்த்தினான்.
பீமனுக்கும் துச்சாதனுக்கும் நடந்த போர், போர்களத்தை சில நிமிடங்கள் உறைய வைத்தது. அவ்வளவு கடுமையான போர். ஆயுதங்கள் உடைந்தன, கேடயங்கள் தகர்க்கப்பட்டன, ஈட்டிகளும் அம்புகளும் சீறிப்பாய்ந்தன. இறுதியில் இருவருக்கும் கதாயுத போர் நடந்தது. கதையுததில் அசாத்திய வீரனான பீமன், துச்சாதனனின் கைகளை முறித்தான். அவன் தோள்களில் அடித்து, நிலைக்குலைய செய்து, மண்ணில் வீழ்த்தினான். அவனது வலது தூளை பிடித்து, “ இந்த கை தானே திரௌபதியின் முடியை பிடித்து இழுத்து வந்தது “ என்று கூறி அவன் வலது கையை உடம்பில் இருந்து பிய்த்து எடுத்தான். மீண்டும் “ இந்த கை தானே திரௌபதியின் சேலையை உருவியது” என்று அவனது இடது கையை பிய்த்து எதுதான். தன் இரு கரங்களில் வலிமை தாங்கி துச்சாதனின் மார்பு கூட்டை பிளந்தான். துச்சாதனன் இறந்தான். பீமனின் வெறி இன்னும் ஓயவில்லை. துச்சாதனனின் மார்பில் இருந்த வழிந்த குருதியை பருகினான். துச்சாதணனின் ரத்தம் பருகிய பீமன், காணவே பயங்கரமாய், இருந்தான். ஒரு பக்கம் அவனுக்கு பயந்த சேனைகள் ஓட, ஒரு பக்கம் அவன் கொன்று குவித்த சடலங்கள் இருக்க, அவன் செல்லும் வழியெல்லாம், புயலுக்குள் சிக்கிய பூவனமாய் சின்னாபின்னமாகின. பின்பு அந்த குருதியை தன் உள்ளங்கையில் ஏந்தி திரௌபதி இருக்கும் இடம் நோக்கி நடந்தான். தன் சபதம் முடித்தான். அவன் ரத்தத்தால் தன் குழலை கொதி முடித்தால் திரௌபதி. மீண்டும் போர்க்களம் திரும்பினான் பீமன்.
சற்று நிதானத்திற்கு வந்த கர்ணன், பீமனை நோக்கி தன் தேரை செலுத்தினான். இருவருக்கும் கடும் போர் மூண்டது. வெற்றியின் மதர்ப்பில் இருந்தான் பீமன். தோல்வியின் தாக்கத்தில் இருந்தவன் கர்ணன். வீறு கொண்ட வேங்கையாய் கர்ணன் பாய, செருக்கு கொண்ட சிறுத்தையாய் பீமன் இருக்க, விரைவில் பீமன் களைத்துப் போனான். ஆயுதங்கள், ரதம் என தன் உடமைகள் அனைத்தையும் இழந்து, அந்த இடத்தை விட்டு வேறிடம் செல்ல, அவனைத் தொடர்ந்த கர்ணன், யாராலும் வெல்ல இயலாதவன் எனும் செருக்கு இருப்பின், வெற்றி உனக்கு நிரந்தரம் அல்ல எனக் கூறினான். அவனை கொள்ளாமல் தன் தாய் குந்திக்கு அளித்த வாக்குறுதியை மீண்டும் நிறைவேற்றினான்.
தருமரை கர்ணன் எதிர்த்தான். தருமர் கர்ணன் மீது அம்பு மழை பொழிய, கர்ணனின் பத்து அம்புகள், அவரது உடமைகளை களைய, கோபம் கொண்ட அவர் தனது சக்தி ஆயுதத்தை கர்ணன் மேல் பிரயோகிக்க, கர்ணன் மூர்ச்சை அடைந்து ரதத்தில் வீழ்ந்தான். மூர்ச்சை தெளிந்து ஏழுந்தான் கர்ணன். எழுந்தவன், தருமரை முறியடிப்பது அப்போதே என முடிவு கட்டி களத்தில் இறங்கினான். தருமரின் ரதத்தை காவலாய் இருந்து காத்த அனைத்து வீரர்களையும் துவம்சம் செய்தான். அவரது வில்லை ஓடித்தான். தருமர் வேறு வில் கொண்டு கர்ணன் மீது ஒரு அம்பை எய்தார். அது இலக்கை நெருங்குகையில், கர்ணன் வேறொரு அம்பால் அதை முறியடித்தான். கோபமுற்ற தருமர், ஒரு தெய்வீக அஸ்திரத்தை கர்ணன் மீது ஏவினார். அதுவும் தவறாது நான்காய் பிரிந்து, கர்ணனின், இரு தோள்களையும், ஒன்று அவன் மார்பையும், ஒன்று அவன் தலையையும் தாக்கியது. தாக்கிய அனைத்து இடங்களிலும் குருதி வழிய, இன்னும் மூர்க்கமானான். அவனது ஒரு அஸ்திரம் தருமரின் தேரை சுக்கல் சுக்கலாக்கியது. தருமர் வேறு தேர் தேடி அந்த இடம் விட்டு மறைய, கர்ணன் அவரைத் தொடர்ந்து சென்று வழி மறித்தான். தருமரைக் கொல்லும் வாய்ப்பு இருந்தும், தன் தாய்க்கு கொடுத்த வாக்குக்காக தருமரை “ நீங்கள் உங்கள் குருவிடம் கற்றவை அனைத்தும் மறந்து போனீர் போல, சென்று மீண்டும் அதை எல்லாம் நினைவு படுத்திக் கொண்டு வாருங்கள். சண்டை இடலாம்” எனக் கூறி அவரை விட்டான்.
இதனால் பெரும் அவமானம் அடைந்தார் தருமர். தருமர் உள்ளம் தளர்ந்து பாசறைக்குத் திரும்பினார். தருமரைக் காண கவலையுடன் அர்ச்சுனன் கண்ணனுடன் பாசறைக்கு வர, அவன் கர்ணனைக் கொன்றுவிட்டு வந்ததாக மகிழ்ந்தார் தருமர். அது இல்லை என்றதும் கோபம் மேலிட “ அவனைக் கொல்லாமல் ஏன் இங்கு வந்தாய்? பயந்து ஓடி வந்து விட்டாயா? உன்னைப்போல ஒரு கோழைக்கு வில் வேண்டுமா? அந்தக் காண்டீபத்தைத் தூக்கி எறி ” என்றார். தருமரின் எதிர்பாரா இப்பேச்சைக் கேட்ட அர்ச்சுனன், உணர்ச்சி வசப்பட்டு தருமரை நோக்கி “ நீயா வீரத்தைப் பற்றிப் பேசுவது? நீ எந்த போர்க்களத்தில் வென்றிருக்கிறாய்? சூதாடத்தானே உனக்குத் தெரியும்? அதில் கூட நீ வென்றதில்லை. இவ்வளவு துன்பங்களுக்கு நீயே காரணம் ” என்றவாறே அவரை கொல்ல வாளை உறுவினான்.
உடன் கண்ணன் அவன் சினத்தைப் போக்க இன்சொல் கூறினார். தன் தவறுணர்ந்த அர்ச்சுனன், மீண்டும் வாளை உறுவினான். ஆனால், இம்முறை தனைத்தானே மாய்த்துக் கொள்ள. தருமரின் பாதங்களில் விழுந்து மன்னிப்புக் கேட்டான். தருமரும் தன் இயல்புக்கு மாறாக நடந்துக் கொண்டதற்கு வருத்தம் தெரிவித்தார். அர்ச்சுனன் ” அண்ணா, கர்ணனைக் கொன்று திரும்புவேன் ” என கூறி போர்க்களம் நோக்கி கிளம்பினான்.
அர்ஜுனன் தன் அண்ணன் தருமருக்கு செய்த சத்தியத்தை நிறைவேற்ற, போர்க்களம் நோக்கி சீறிப்பாந்தான். போர்களத்தில் பீமனை சந்தித்து, தருமரின் நிலைமையை கூறி, கர்ணனின் தேரை தேடினான்...
மறுபுறம் கர்ணனோ ஒரு திறம் வாய்ந்த அதிரதனாய் கண் கூசும்படி ஜொலித்துக் கொண்டு இருந்தான். ஒருவர் பின் ஒருவராக தன்னை எதிர்க்க வந்த பாண்டவ அதிரதர்களை கொன்று குவித்து கொண்டு இருந்தான். செல்லும் வழியெல்லாம் தன் முத்திரையை பதித்தான். ஆயிரக் கணக்கான வீரர்கள் இருந்த இடம் தெரியாது போயினர். கௌரவ படைகள் கர்ணனின் அம்புகளையும், அவனின் வளிமையான தோள்களையும் மட்டுமே நம்பி இருந்தன. அதை கர்ணனும் நன்கு அறிந்திருந்தான். தன் மகன்களை இழந்த கர்ணனின் கோபம் உச்சத்தில் இருந்தது.
இதன் இடையே, துச்சாதணனை பீமன் கொன்ற முறைக்காக, கர்ணனின் சகோதரன் சித்ரசேனன் பீமனை கடிந்து பேசிக் கொண்டு இருக்க, யுத்தமான்யு சித்திரசேனனுக்கு போரிட சவால் விடுத்து, போரிலே அவன் தலையைக் கொய்து கொன்றான். தன் கண் முன்னே உயிரிழந்த இருவரின் இறப்பிலும், துக்கமும், ஆவேசமும் கொண்ட கர்ணனை நோக்கித்தான் அர்ஜுனன் வந்து கொண்டு இருந்தான்.
இது இவ்வாறு இருக்க, துச்சாதனன் மற்றும் சித்திரசேனனின் மறைவில் கோபம் கொண்ட கர்ணனின் மகன், வ்ரிஷசேணன், நகுலனை நோக்கி அம்பென விரைந்தான். யாராலும் அவனைத் தடுக்க இயலவில்லை. (கர்ணனின் மகன் அல்லவா???) சுற்றி இருந்தவர் அனைவரையும் தோற்கடித்து, நகுலனை அடைந்து நகுலின் ரதக் குதிரைகளை எல்லாம் கொன்றான். நகுலன், வேறொரு ரதத்தில் ஏறிக் கொள்ள, அதையும் உடைத்தான். கோபம் கொண்ட நகுலன், தன் வாளையும், கேடயத்தையும், எடுத்துக் கொண்டு கீழே குதித்தான். அவனோடு சரிக்குச் சரியாய் போரிட்டான். நகுலன் சோர்ந்து போகும் நேரம், கண்ணன் நகுலின் நிலையை அர்ஜுனனுக்கு கூறினான். உடனே அங்கே விரைந்தான் அர்ஜுனன். அர்ஜுனனைக் கண்டதும், நகுலன் அவனிடம், தயவு செய்து இவன் கதையை முடித்து விடு எனக் கூறி பீமனின் ரதத்தில் ஏறிக் கொண்டான்.
அவனைத் தொடர்ந்த வ்ரிஷசேணனை அம்பெய்து கொன்றான் அர்ஜுனன். பாண்டவப் படையினர் கர்ணனின் தீரம் எனும் கடலுக்கும் மூழ்கிக் கொண்டு இருந்தனர். அவர்களைக் காக்கும் படகாய் அர்ஜுனன் அங்கே வந்து சேர்ந்தான்.
அவனைத் தொடர்ந்த வ்ரிஷசேணனை அம்பெய்து கொன்றான் அர்ஜுனன். பாண்டவப் படையினர் கர்ணனின் தீரம் எனும் கடலுக்கும் மூழ்கிக் கொண்டு இருந்தனர். அவர்களைக் காக்கும் படகாய் அர்ஜுனன் அங்கே வந்து சேர்ந்தான்.
ரத்தச் சிவப்பில் இருந்தன கர்ணனின் விழிகள் தன் மகனை நினைத்து. பேரிகைகள் முழங்க, கோஷங்கள் எழும்ப, சங்குகள் முழங்க, இருவரும் ஒருவரை ஒருவர் எதிர்கொள்ளும் நிலையை காண, அனைத்து தேவர்களும், அசுரர்களும், ரிஷிகளும், கந்தர்வர்களும், ராட்ஷசர்களும், நாகர்களும் , வித்யாதரர்களும் குவிந்து இருந்தனர். புகழ் பெற்ற இரு வீரர்களும் தன் திறனை முழு வீச்சில் வெளிப்படுத்தப் போகும் வித்தைகளைக் காண விழி இமைக்காது காத்திருந்தனர். சூரியனோ, தன் மகனுக்கு ஆசி கூறுவது போலே பிரகாசமான தன் கதிர்களை ஒளிர்த்துக் கொண்டு இருந்தான். இந்திரனும், தன் மகனின் வெற்றிக்காய் ப்ராத்தித்துக் கொண்டு ஆசிகளை வழங்கினான். மூவுலகத்தின் கடவுள் கண்ணன் அர்ஜுனனின் ரதத்தை நடத்த, மத்ர தேச அரசன் கர்ணனின் ரதத்தை நடத்த, இருவரும் சந்திக்கும் வேளை நெருங்கியது. .
கர்ணனின் பக்கம், துரியோதனன், கிருதவர்மன், கிருபர், சகுனி மற்றும் அஷ்வத்தாமா அனைவரும் இருந்தனர். அவர்கள் பின்னே ஆயிரக்கணக்கில் வீரர்கள் அணிவகுத்து நின்றனர். அர்ஜுனனின் பக்கம், தருமரைத் தவிர்த்து சகோதரர்கள் மூவரும், சிகண்டி, சாத்யகி என அனைவரும் இருக்க, அவர்கள் பின்னும் ஆயிரக்கணக்கில் வீரர்கள் அணிவகுத்து நின்றனர்.
வில் வித்தையின் தலை சிறந்த வீரர்கள் இருவரும் மோதப்போகின்றனர். எனவே சில அஸ்திரங்களின் ஆளுமை, அவற்றின் செயல்பாடு பற்றி சற்று தெரிந்து கொள்வோம். அஸ்திரங்கள் என்பவை மிகவும் வலிமை வாய்ந்தவை. அனைவருக்கும் அவை கிட்டிவிடாது. முறையான பயிற்சியும், குருவின் துணையும் இருந்தால் மட்டுமே அவை வீரனுக்கு கைவசமாகும். பல அஸ்திரங்கள் இருந்தாலும், நான் அறிந்த சில அஸ்திரங்களைப் பற்றிய விவரங்களை இங்கே பாப்போம்.
பிரம்மாஸ்திரம் : இலக்கை மொத்தமாய் அழிக்கும் வலிமை கொண்டது. வேறு எத்தகைய அஸ்திரத்தையும் எதிர்க்கும் வலிமை கொண்டது. அஸ்திரத்துக்கு அதிபதி பிரம்ம தேவன்.
பிரம்மஸ்ரிஷா : இதுவும் பிரம்மாவின் அஸ்திரம். தேவர்களையும் எதிர்க்கு வலிமை கொண்டது. பிரம்மாஸ்திரத்தின் அளவு அழிவை தரவல்லது.
இந்திராஸ்திரம் : இந்திரனின் அம்சமானது. ஆயிரக்கணக்கான அஸ்திரங்களை வானிலிருந்து மழை பொழிவது போலே பொழிய வைக்க வல்லது.
வஜ்ராயுதம் : இதுவும் இந்திரனின் அஸ்திரம். மின்னலால் தாக்குண்டது போல இலக்கை அழிக்கும் வலிமை கொண்டது.
பாசுபதாஸ்திரம் : சிவனிடம் இருந்து பெறப்பட வேண்டிய அஸ்திரம். இலக்கு எந்த இயல்புடையதாக இருப்பினும், அதை அடியோடு அழிக்கும் வலுப்பெற்றது.
ஆக்னேயாஸ்ச்திரம் : அக்னியின் அஸ்திரம். இலக்கை எரித்து சாம்பலாக்கும் அஸ்திரம்
வருணாஸ்திரம் : வருணனின் அஸ்திரம். எல்லைஇல்லாமல் எரியும் நெருப்பையும் அடக்கவல்லது. பொதுவாக ஆக்னேயாஸ்ச்திரத்தை எதிர்க்க செலுத்தப்படும் அஸ்திரம்
வாய்வாஸ்திரம் : கடுமையான சூறாவளியை உண்டாக்கும் அஸ்திரம். இலக்கை பூமியை விட்டுத் தூக்கி சுழற்றி அடிக்கும் அஸ்திரம். வாயுவின் அஸ்திரம்
சூரியாஸ்திரம் : இருளை மறைத்து ஒளியைக் கொடுக்கும் அஸ்திரம். சூரியனின் அஸ்திரம்.
நாகாஸ்திரம் : நாகமாய் மாறி இலக்கை அழிக்கும் வலுகொண்டது. கிடைத்தற்கு அரியது. பொதுவாய் இதற்கு ஈடான/எதிரான அஸ்திரம் கிடையாது.
நாகபாசானம் : விஷம் கொண்ட நாகங்கள், இலக்கை கட்டுண்டு கிடக்கச் செய்யும். இதில் கட்டுண்டவர் கடவுளே ஆனாலும் கண்விழிப்பது அரிது.
மோகினி அஸ்திரம் : விஷ்ணுவின் அஸ்திரம். எய்யப்படும் இலக்கை ஒரு மாயையில் சிக்க வைக்கும். ஒரு முழு சேனையையும் மதி இழக்கச் செய்யும் வலு கொண்டது
சம்மோஹனம் : எதிரியின் மொத்த சேனைக்கும் ஆபத்தை வரவழைக்கும் ஆற்றல் கொண்டது
பிரம்மோஹனம் : இதுவும் சம்மோஹன அஸ்திரத்தைப் போன்றது
நாராயனாஸ்திரம் : எண்ணற்ற அம்புகளையும், சக்கரங்களையும் இலக்கை நோக்கி மழை போல பொழியச் செய்யும். இதை யாரும் எதிர்த்து நின்றால், நிற்பவரின் வலிமையையும் இந்த அஸ்திரத்தில் சேரும். நிராயுதபாணியாய் நிற்பவரை அஸ்திரம் தாக்காது. ஒரு முறை மட்டுமே உபயோகிக்க இயலும். பின்னர் இது விஷ்ணுவை அடைந்து விடும்
வைஷ்ணவாஸ்திரம் : இதுவும் விஷ்ணுவின் அஸ்திரம். இலக்கை, அதன் இயல்பு எதுவாக இருப்பினும் அழிக்கும் வல்லமை கொண்டது.
பர்வதாஸ்திரம் : இலக்கின் மேல், வானத்தில் இருந்து மலை ஒன்றை விழச் செய்யும்.
சரி இனி யுத்த பூமிக்கு மீண்டும் திரும்புவோம்....
கர்ணனும், அர்ச்சுனனும் போரில் இறங்கினர். கர்ணன், மற்றும் இருவருக்கும் இடையே கடுமையான யுத்தம் துவங்கியது. இரு வீரர்களுமே தங்கள் மனதில் வெற்றி அல்லது வீரமரணம் எனும் எண்ணத்தை விதைத்திருந்தனர்.
துவக்கம் அர்ஜுனனிடம் இருந்து. ஆக்னேய அஸ்திரத்தை கொண்டு கர்ணனுக்கு துணை இருந்த அனைத்து வீரர்களையும் அக்னி கொண்டு துரத்தினான். அதற்கு பதிலாய் கர்ணன், வாருனாஸ்திரம் எய்தான். அது கரிய மேகங்களுடன் கூடிய மழையை வருவித்து அந்த இடத்தையே வெள்ளக்காடாக ஆக்கியது.
கர்ணனும், அர்ச்சுனனும் போரில் இறங்கினர். கர்ணன், மற்றும் இருவருக்கும் இடையே கடுமையான யுத்தம் துவங்கியது. இரு வீரர்களுமே தங்கள் மனதில் வெற்றி அல்லது வீரமரணம் எனும் எண்ணத்தை விதைத்திருந்தனர்.
துவக்கம் அர்ஜுனனிடம் இருந்து. ஆக்னேய அஸ்திரத்தை கொண்டு கர்ணனுக்கு துணை இருந்த அனைத்து வீரர்களையும் அக்னி கொண்டு துரத்தினான். அதற்கு பதிலாய் கர்ணன், வாருனாஸ்திரம் எய்தான். அது கரிய மேகங்களுடன் கூடிய மழையை வருவித்து அந்த இடத்தையே வெள்ளக்காடாக ஆக்கியது.
அர்ஜுனன் வாயுவாஸ்திரம் கொண்டு அந்த மழை மேகங்கள் அனைத்தும் தூர துரத்தினான். பின்னர், இந்திரனால் தனக்கு தரப்பட்ட சக்தி அஸ்திரத்தை கர்ணன் மேல் பிரயோகித்தான். அஸ்திரத்தின் வலிமையால் ஆயிர கணக்கான அம்புகள் காண்டீபத்திலிருந்து பாய்ந்து கர்ணனின் உடலை பதம் பார்த்தன. அதற்கு பதிலாய் பார்கவா அஸ்திரத்தை கர்ணன் பிரயோகிக்க, அது பாண்டவ சேனையின் ஆயிரக்கணக்கான வீரர்களைக் கொன்றது. அதில் கோபம் கொண்ட அர்ஜுனன், கண்ணாலும், பீமனாலும் ஊக்கம் பெற்று, பிரம்மாஸ்திரத்தை பிரயோகித்தான். அது கர்ணனின் தரப்பின் ஆயிரம் வீரர்களைக் கொன்றது. கர்ணன் அதற்கு பதிலாக, ஐந்து சர்ப்ப அம்புகளை எடுத்து அதை கண்ணனின் மீது ஏவினான். அது கண்ணனின் உடலில் ஊடுருவி, பூமிக்குள் பாய்ந்து மீண்டும் கர்ணனிடமே செல்லத்துவங்க, அர்ஜுனன் அவற்றை தன் அம்புகளின் மூலம் துண்டு துண்டாக்கினான். அந்த அம்பினால் கண்ணனுக்கு பாதிப்பு எதுவுமே இல்லாமல், எப்போதும் போல சிரித்துக் கொண்டே இருந்தார். ஆனாலும், கண்ணனை, கர்ணன் தாக்கியதில் கோபம் கொண்ட அர்ஜுனன், கர்ணன் சேனையில் கர்ணனுக்கு துணை இருந்த ஆயிரக்கணக்கான வீரர்களைக் கொன்று குவித்தான்.
அர்ஜுனனின் தாக்குதலில் அஞ்சிய கர்ணனின் சேனை வீரர்கள் அனைவரும் அவனை விட்டு விலகிச் சென்றனர். தனி ஒருவனாய், அர்ஜுனனையும், அவனைக் காக்க நின்ற வீரர்களையும் தாக்கினான் கர்ணன். அர்ஜுனனிடம் அம்புகள் தீராத அம்புறாத் துணிகள் இரண்டு உண்டு. கர்ணனிடம் அது இல்லை. அர்ஜுனனிடம் உடைக்க இயலாத காண்டீபம் உண்டு, கர்ணனிடமும் உடைக்க இயலாத விஜயம் உண்டு. ஆனால், காண்டீபத்தில் நாணை அறுக்க இயலாது. விஜயத்தில் அப்படி இல்லை. காண்டீபத்தின் நானை அவிழ்க்க வேண்டுமானால் முடியும். ஆனால் அர்ஜுனன் கண் இமைக்கும் நேரத்தில் அதை மீண்டும் கட்டும் வலிமை உடையவன். காண்டீபத்தில் நூற்றி ஒரு நாணும் உண்டு. செயற்கரிய வீரன் ஒருவன் காண்டீபத்தின் நாணை அறுத்தாலும் அந்த நூற்று ஒரு நாண் வரை அது மீண்டும் மீண்டும் வரும். ஆனால், காண்டீபத்தின் நாணை அறுப்பது அவ்வளவு சுலபம் அல்ல. இது அத்தனை இருந்தும் கர்ணன் அர்ஜுனனை எதிர்த்தான். தனி ஒருவனாய், களத்தில் நின்று அர்ஜுனனை சார்ந்த வீரர்கள் அனைவரையும் களைத்துப் போகச் செய்தான்.
களத்தில் அர்ஜுனனும் கர்ணனும் மட்டுமே. காணுதற்கு அறிய ஒரு காட்சி கண் முன்னே அரங்கேற, கண் இமைக்கக் கூட மனம் இல்லாமல் அனைவரும் அதை வியப்புடன் பார்த்து கொண்டிருந்தனர். நாடி, நரம்பு, ரத்தம், மனம் என அனைத்திலும் போர்த்திறம் ஊறிய இரண்டு வீரர்கள் அங்கே போரிட, காற்றும் நின்று போனது போரினைக் காண. மேகமும், மேகமும் மோதினால் மின்னல் வரும். இது இயற்கை. மின்னலும், மின்னலும் மோதினால் வருவது என்னவோ??? அதுதான் அன்றைய குருச்சேத்திரம்.
போரில் அர்ஜுனனின் தாக்குதலில் கர்ணனின் ரதம், சில அடிகள் வரை பின்னுக்குத் தள்ளப்பட்டது. சுதாரித்து கொண்ட கர்ணன் அர்ஜுனனின் ரதத்தை தாக்கினான். கர்ணனின் தாக்குதலில் சில அங்குலங்கள் மட்டுமே பின்னுக்குத் தள்ளப்பட்டது. கிருஷ்ணர் உடனே எழுந்து நின்று “ சபாஷ் !!! கர்ணா. உன் வலிமையையும் நான் மெச்சுகிறேன்” என்று பாராட்டினார். கோபம் கொண்ட அர்ஜுனன் கண்ணனை பார்த்து “ என் தாக்குதலில் கர்ணனின் ரதம் அடிகள் கணக்கில் நகர்ந்ததே அதற்கு நீங்கள் ஒன்றுமே சொல்லவில்லையே. நமது ரதம் நகர்ந்தற்க்கு அவனை பாராட்டுகிறீர்களே???” என்றான். “ ஆம் அர்ஜுனா, அவன் ரதத்தில் மனிதர்களான சல்லியனும், கர்ணனும் மட்டும்தான் இருக்கிறார்கள். உன் ரதத்தில், நீயும், மூவுலகையும் தன்னுள்ளே அடக்கிய நானும் இருக்கிறேன். மூவுலகங்களும் என்னுள் அடக்கம். கூடவே உன் தேரின் கொடியில் மகா பலசாலியாய் அனைவராலும் அறியப்பட்ட அனுமன் இருக்கிறார். நாங்கள் இருவரும் இருக்கும் ரதத்தை எந்த மனிதனாலும் அசைக்கக் கூட முடியாது. ஆனால், கர்ணனின் தாக்குதலில் ரதம், சில அங்குலங்கள் ஆனாலும் நகர்ந்திருகிறதே. நானும் அனுமாரும் இல்லை என்றால் நினைத்துப்பார் உன் நிலைமையை. உன் தேர் இந்த பூலோகத்தில் இருந்தே தூக்கி எரிய பட்டிருக்கும். ” என்றார்.
இந்த விவாதம் அர்ஜுனன் தரப்பில் நடந்து கொண்டு இருக்க, கர்ணனின் தரப்பில் சல்லியனும் அவனும் உரையாடுகிறார்கள்.
“எத்தனை முறை அவிழ்தாலும் அர்ஜுனன், காண்டீபத்தில் நாணை கண் இமைக்கும் நேரத்தில் கட்டிக் கொள்கிறானே. இப்போது தெரிகிறது அவனை ஏன் வில்வித்தையில் சிறந்தவன் என்று அனைவரும் சொல்கிறார்கள்” என்று கூறுகிறான் கர்ணன்.
“எத்தனை முறை அவிழ்தாலும் அர்ஜுனன், காண்டீபத்தில் நாணை கண் இமைக்கும் நேரத்தில் கட்டிக் கொள்கிறானே. இப்போது தெரிகிறது அவனை ஏன் வில்வித்தையில் சிறந்தவன் என்று அனைவரும் சொல்கிறார்கள்” என்று கூறுகிறான் கர்ணன்.
“ கர்ணா, உண்மைதான். அவன் குரு வில்வித்தையில் மிகச் சிறந்தவர். அவரது பரிபூரண ஆசியையும், அருளையும், வழிகாட்டுதலையும் பெற்றவன் அர்ஜுனன் “ என்கிறார் சல்லியன்.
அர்ஜுனனின் வலிமையைக் காணக் காண, கர்ணனிடம் உற்சாகம் ஊற்றுப் போலப் பொங்குகிறது. “ இப்படி ஒரு போரைத்தான் நான் எதிர்நோக்கினேன். சளைக்காமல் போரிடும் வீரன் ஒருவனைத்தான் நான் தேடிக் கொண்டு இருந்தேன். நிமிடம் கூட என்னை ஓய்வெடுக்க விடாது, நான் கற்று வைத்த அத்தனை திறமையும் என்னிலிருந்து வெளிக்கொணர வைக்கும் இந்த அர்ஜுனன் மீதும் என் ப்ரீத்தி பெருகுகிறது. இந்த நிமிடத்தில் நான் தான் உலகிலேயே மகிழ்ச்சியின் உச்சத்தில் இருப்பவன். போரிடும் போதும், நமக்கு நிகரானவர்களோ, நம்மை விட வலிமை மிக்கவர்களோ அவர்களோடு போரிடும் போதுதான் நமது திறமை முழு அளவில் வெளிப்படும். நம்மை மேலும், மேலும் வலுப்படுத்த, இதுபோன்ற போர்தான் அவசியம். நான் எப்போதும் விரும்புவதும் அதைத்தான். அது இன்றுதான் நிறைவேறுகிறது. “ என்று கூறினான் கர்ணன்.
இதை கேட்ட சல்லியன் “எதிரியிடம் கூட நல்லதைக் காணும் உன் வீரத்தின் திறத்தின் முன் நான் தலை வணங்குகிறேன் கர்ணா. மகனே உனக்கு சாரதியாய் இருப்பதில் வருத்தமும், உன்னை ஜெயிக்க விடக் கூடாது எனும் வக்கிரமும் கொண்டு இருந்தேன். உன் திறமையைக் கண்டதும், வக்கிரம் மறைந்தது. உன் குணம் கண்டு, என் வருத்தமும் மறைந்தது. இப்போது நீ பேசியதைக் கண்டதும், உன் மீதும், வாத்சல்லியமும், வாஞ்சையும் வஞ்சமின்றி பல்கிப் பெறுகிறது கர்ணா. வெற்றி உன் வசமாகட்டும் கர்ணா “ என்று வாழ்த்தி ஆசி கூறினார்.
அம்புகள் பறந்தன. கர்ணனின் விஜயம் என்ற வில்லும்..காண்டீபமும் ஒன்றை ஒன்று மோதின.அர்ச்சுனனுக்கு தான் வைத்திருந்த சக்தி என்னும் வேல் இப்போது இல்லையே என கர்ணன் வருந்தினான். இருவருக்கும் இடையே போர் தொடர்ந்து நடைபெறுகிறது. இருவரும் அஸ்திரங்களின் மூலம் ஒருவருக்கு ஒருவர் பதில் சொல்லிக் கொண்டு இருந்தனர். இது இவ்வாறு இருக்க, இந்த யுத்தம் பற்றிக் கேள்வியுற்ற அஸ்வசேணன் என்னும் நாகம், இந்த யுத்தத்தைக் காண வந்தது. இந்த நாகம், அர்ஜுனனை பழி வாங்க வேண்டும் என பல்லாண்டு காலமாய் காத்துக் கொண்டு இருக்கும் நாகம். அர்ஜுனன், அக்னிக்காக, கான்டவ வனத்தை அழிக்கையில், தன் தாயின் கருவில் இருந்த இந்த நாகம், மிகுந்த இடர்களுக்கு இடையில் தப்பி பிழைத்து, தன் தாயைக் கொன்றவனைப் பழி வாங்கிடத் துடித்துக் கொண்டு இருந்தது. கர்ணனும், அர்ஜுனனும், போரிடுகிறார்கள் என்பதை அறிந்து, வேகமாய் களத்தை அடைந்தது. அர்ஜுனனைக் கொல்லவென கர்ணன் வைத்திருந்த நாகாஸ்திரத்தில் சென்று புகுந்தது.
கர்ணனும், பல அஸ்திரங்கள் எய்து பார்க்க, அர்ஜுனன் அத்தனை அஸ்திரங்களையும் தடுத்தான். அர்ஜுனனின் அத்தனை அஸ்திரங்களையும் கர்ணன் தகர்த்தான். முடிவில் கர்ணன், நாகாஸ்திரத்தை எடுத்து, விஜயத்தில் தொடுத்து, நாணை முழு நீளத்திற்கு இழுத்து எய்ய போகும் தருணம், கர்ணனின் குறியைக் கண்ட சல்லியன் கர்ணனிடம், அவன் கழுத்துக்கு குறி வைக்காதே, மார்புக்கு குறி வை என்றான். கர்ணன் “ அர்ஜுனன் மாபெரும் வீரன், அவன் உயிர் சில நிமிடங்கள் ஆனாலும் துடித்து இறப்பதை நான் விரும்பவில்லை. ஒரே நொடியில் வேதனை இன்றி அவன் இறக்கட்டும். இதோ அவன் கழுத்துக்கு குறி வைத்து எய்கிறேன் அம்பை” என்றான்.
சல்லியன் மீண்டும் வலியுறுத்தினான் “ சொன்னாள் கேள் கர்ணா, அர்ஜுனனிடம், நாகாஸ்திரத்துக்கு தகுந்த பதில் அஸ்திரம் கிடையாது. எனவே கண்ணன் நிச்சயம் ஏதாவது சூழ்ச்சி செய்வான். எனவே நீ அவன் மார்புக்கு குறி வை” என்றான். கர்ணன் கேட்கவில்லை நாகாஸ்திரம், நெருப்பைக் கக்கிக் கொண்டு அர்ஜுனனை நோக்கிப் பாய, அர்ஜுனன் தன் முடிவு நெருங்கி விட்டது என கையைக் கட்டிக் கொண்டு காத்திருக்க, அண்டசராசரங்கள் நடுநடுங்க, போரை ஆவலாய் காணக் காத்திருந்த தேவர்கள் மனம் பதைபதைக்க, நாகஸ்திரம் அர்ஜுனனை நெருங்கியது.
சல்லியன் மீண்டும் வலியுறுத்தினான் “ சொன்னாள் கேள் கர்ணா, அர்ஜுனனிடம், நாகாஸ்திரத்துக்கு தகுந்த பதில் அஸ்திரம் கிடையாது. எனவே கண்ணன் நிச்சயம் ஏதாவது சூழ்ச்சி செய்வான். எனவே நீ அவன் மார்புக்கு குறி வை” என்றான். கர்ணன் கேட்கவில்லை நாகாஸ்திரம், நெருப்பைக் கக்கிக் கொண்டு அர்ஜுனனை நோக்கிப் பாய, அர்ஜுனன் தன் முடிவு நெருங்கி விட்டது என கையைக் கட்டிக் கொண்டு காத்திருக்க, அண்டசராசரங்கள் நடுநடுங்க, போரை ஆவலாய் காணக் காத்திருந்த தேவர்கள் மனம் பதைபதைக்க, நாகஸ்திரம் அர்ஜுனனை நெருங்கியது.
அந்த நேரத்தில், கண்ணன் தன் காலால் தேரை அழுத்த, அது, ஒன்னரை அடி மண்ணுக்குள் புதைந்தது. அர்ஜுனன் தலையைக் கொய்ய வந்த நாகாஸ்திரம், அர்ஜுனனின் கிரீடத்தை(அர்ஜுனனுக்கு அவன் தந்தை இந்திரனால் வழங்கப்பட்டது) மட்டும் சுக்குநூறாக உடைத்தது. அஸ்திரம் திரும்ப கர்ணனை வந்தடைந்தது. கோபம் கொண்ட சல்லியன் கர்ணனை மீண்டும் நாகாஸ்திரத்தை செலுத்துமாறு வற்புறுத்தினான். தான் குந்திக்கு செய்து கொடுத்த சத்தியத்தால், கர்ணன் அதை உபயோகிக்க மறுத்தான். சல்லியன் மீண்டும் மீண்டும் வற்புறுத்த கோபம் அடைந்த கர்ணன் “ நான் என்ன செய்ய வேண்டும் என்பதை நீங்கள் சொல்ல வேண்டாம். உங்கள் வேலை ரதம் ஓட்டுவது மட்டும் தான். அதை மட்டும் செய்யுங்கள்” என்றான். மீண்டும் இரு வீரர்களும், உயிரைப் பறிக்கும் அஸ்திரங்களை இருவரும் ஒருவர் மீது ஒருவர் எய்து கொண்டு போரிடுகிறார்கள். அர்ஜுனன், எய்த என்னன்ற அம்புகள் கர்ணனைத் தாக்க, கர்ணன் சோர்ந்து போகிறான். அப்போது அவன் முடிவு அவன் கண்களில் தெரிகிறது. மரணம் தன்னை நெருங்கி வந்ததை கர்ணன் உள்மனதில் அறிகிறான். காளதேவன் அசிரீரியாக “ கர்ணா, பூமாதேவி உன் ரதத்தை தன்னுளே பிடித்து வைக்கப் போகிறாள் ” கவனம் என எச்சரிக்கிறார்.
அதை உணர்ந்து செயல்படும் முன்னரே தேர் சக்கரம் மண்ணில் புதைகிறது. கர்ணன் சல்லியனிடம் தேரை பூமியில் சிக்குண்ட இடத்தில் இருந்து மீட்க்குமாறு கூறினான். அதற்க்கு சல்லியன் “ எனது வேலை தேர் ஓடுவது மட்டும் தான். தேரரை மீட்பது அல்ல. மேலும் நான் ஏற்கனவே துரியோதனனிடம் என்னை நீ அவமதித்து பேசினாலோ, முறை தவறி பேசினாலோ நான் உன்னை விட்டு விலகி விடுவேன் என்ற நிபந்தையின் பெயரில் தான் உனக்கு சாரதி ஆனேன். இப்போது நான் போகிறேன் “ என்று கூறிவிட்டு நகந்தார். பூமாதேவியின் சாபம் வேலை செய்ய தொடங்கியது. கர்ணன் தன் தேரில் இருந்து குதித்து தன் தேர் சக்கரங்களை வெளியே எடுக்க முயன்றான்.
இந்த சூழ்நிலையில் அர்ஜுனன் அவனை கொல்ல விரும்பவில்லை. ஆனால் பகவான் ஸ்ரீ கிருஷணர் அர்ஜுனனை நோக்கி “ ஏன் தயங்குகிறாய் அர்ஜுனா? அவன் மீது உள்ள அணைத்து சாபங்களும் ஒன்றாக வேலை செய்கிறது. இது தான் சரியான தருணம். செலுத்து உன் அம்புகளை. கொன்றுவிடு அவனை என்றார். ” அர்ஜுனனும் தன் இலக்கை குறித்தான். இலக்கு நிராயுதபாணி ஆனா கர்ணன். நிராயுதபாணி ஆன அவன் அர்ஜுனன் தன் மேல் போர் தொடுப்பதை கண்டு “ தருமத்தின் பெயரில் கேட்கிறேன் தேரை பூமியில் இருந்து நீட்க எடுக்க சற்று அவகாசம் கொடு” என கூறினான்.
அப்போது கண்ணன் “ கர்ணா, நீயா தர்மத்தைப் பேசுகிறாய். துரியோதனன், சகுனியுடன் சேர்ந்து தீமைக்குத் துணைப்போனாய். அப்போது உன் தர்மம் என்ன ஆயிற்று? மன்னர் நிறைந்த அவையில் பாஞ்சாலியின் உடையைக் களைய நீயும் உடந்தைதானே? அப்போது எங்கே போயிற்று உன் தர்மம்? பாண்டவர்கள் பதின்மூன்று காலம் வன வாசம் முடித்து வந்ததும் நீ தர்மப்படி நடந்துக் கொண்டாயா? அபிமன்யூவை தர்மத்திற்கு விரோதமாக பின்னால் இருந்து தாக்கினாயே, அப்போது எங்கே போயிற்று உன் தர்மம்? “ என கேட்டார்.
கர்ணன் பதில் பேச முடியாது நாணித் தலை குனிந்தான். ஆயினும் அர்ச்சுனனின் சீறிய கணைகளை தடுத்து நிறுத்தினான். இறுதியாக அர்ச்சுனன் தன் சக்தி அஸ்திரத்தை எடுத்து “ நான் தர்மயுத்தம் செய்வது உண்மையெனின் இது கர்ணனை அழிக்கட்டும் ” என கர்ணன் மீது செலுத்தினான். தர்மம் வென்றது. சரியாய் அவன் மார்பிலே பாய்ந்தது அஸ்திரம். அந்தக் கணத்தில் பரசுராமரின் சாபம் பலித்து, கர்ணனுக்கு, அஸ்திரங்களை ஏவும் மந்திரங்கள் மறந்து போக உதவி அற்ற நிலையில், கர்ணன், புறமுதுகு காட்டாது, அர்ஜுனனின் அஸ்திரங்களை மார்பிலே ஏந்தினான். அம்பு மீது அம்பு விட்டான் அர்ஜுனன். ஆனாலும் கர்ணனின் உயிரை அவற்றால் தீண்டக் கூட முடியவில்லை. ஒரு கட்டத்தில், அர்ஜுனனின், மின்னல் வேக அம்புகள் அனைத்தும், மலர் மாலைகளாகி கர்ணனுக்கு விழத் துவங்கின. குழம்பினான் அர்ஜுனன்.
அப்போது கண்ணன் கர்ணனிடம் யாசம் கேட்க்கும் அந்தணனாக சென்று யாசிக்கிறார். கர்ணனோ “ என்னிடம் இப்போது இருப்பது என் உயிர் மட்டும் தான். இல்லை என்று என்னை கூற வைக்காமல், அதை யாசகமாக பெற்று என்னை பெருமை அடைய வையுங்கள். இல்லை என்று சோழ வைத்து என்னை சிறுமை படுத்திவிடாதீர்கள் “ என்று கூறினான். அதற்க்கு கண்ணனோ “ கர்ணா!!! நீ செய்த தருமத்தின் பயனை எல்லாம் எனக்குத் தாரை வார்த்துக் கொடுத்து விடு. அதுபோதும்.” என்கிறார். கர்ணனும் மறு மொழியின்றி இறப்பிலும் இன்முகத்தோடு, தான் செய்த தான, தர்மத்தின் பலனை எல்லாம், தன் உதிரம் கொண்டு கண்ணனுக்கு தாரை வார்த்துக் கொடுத்தான். பின் கிருஷ்ணன் தன் விஸ்வரூபத்தை காட்டி, “அழியா புகழோடு நீ முக்தியையும் பெறுவாய்” என்று வாழ்த்தினார். கர்ணன் தன் இரு கைகளை கூப்பி பரந்தாமனை வணங்க, அவன் உயிர் பிரிந்தது. கர்ணன் வீர மரணம் அடைகிறான். நட்புக்கு இலக்கணமாய், வீரத்திற்கு உதாரணமாய், கொடுத்த வாக்கிற்கு பீஷ்மமாய், வள்ளல்களுக்கு எல்லாம் வள்ளலாய், வாழ்ந்த கர்ணன் சரித்திர நாயகனாய் மண்ணில் சாய்ந்தான். வீராதி வீரனான கர்ணனின் குருக்ஷேத்திர பயணம் முடிந்தது... கர்ணனை போல் ஒரு வீரன் இனி ஒரு முறை இந்த மண்ணில் பிறக்க போவதில்லை.....
தன் மகனின் முடிவை பார்த்த சூரியன் தன் கதிர்களை மறைத்தான்.... இருள் சூழ்ந்தது....... சங்கு முழங்க.... அன்றைய போர் முடிவிற்கு வந்தது......
(தொடரும்.............)
Thufff💦💦 Onnu Koda nanbara maathiri elaii Verum karpanai kadhai maari irukku. Konjm pugazhndha paravalla.romba overa pugazhndhu andha character aye joker funda maari aakita bro.. waste 🤢🤮
ReplyDelete